பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் பலி… விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 7 பேர் காயம் 8 அறைகள் தரைமட்டம்… நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கட்டிட இடுப்பாடுகளில் சிக்கிய ஒரு பெண்ணின் உடல் சடலமாக மீட்பு…
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய பிரபா பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க ரசாயன மூல பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி வெடித்து ஆலையிலிருந்து வெளியேறினர். இருப்பினும் 6 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அறிந்து விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.
பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்ததால் ஆலைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு இடிபாடுகளில் சிக்கி இருந்த வதுவார்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி ( 40 ) என்ற பெண்ணை சடலமாக மீட்டனர்.
இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.