உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முறையாக பணி வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத சூழலில், இன்று மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி, பேரையூர் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









