பொதுமக்கள் எழுப்பிய சத்தம்: அதிகாலையில் தலை தெரிக்க ஓடிய ஒற்றை காட்டு யானை – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!!
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மலையில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வனப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகளின் கூட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் முகாமிட்டு உணவு தேடி அலைந்து திரிந்து உலா வந்து கொண்டு உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாதாரணமாக வெளியே செல்வதற்கு கூட அச்சமடைந்து உள்ளனர். வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து அப்பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகளை அவ்வப்போது வனப்பகுதிகளுக்குள் விரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தடாகம் அருகே 22 நஞ்சுண்டாபுரத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை இரவில் அப்பகுதியில் சுற்றி திரிந்து உள்ளது. அதிகாலை அப்பகுதி பொதுமக்கள் அந்த யானையை கண்டதும், சத்தம் எழுப்பி விரட்டி உள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு அந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள தெருக்களில் தலை தெரிக்க ஓடியது. அதனை அங்கு குடியிருந்த ஒருவர் மொட்டை மாடியில் இருந்து எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.