கோவையில் சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பாக சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் பிரபல தொழலதிபராக இருந்து,இந்தியாவில் குறிப்பாக தமிழக மாணவ,மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கல்வி தொடர்பான சேவைகளை சித்திரை செல்வகுமார் செய்து வருகிறார். தனது சி.எஸ்.கே.குளோபல் அறக்கட்டளை மூலமாக பல்வேறு சமுதாய நல சேவைகளை செய்து வரும் இவர்,சிவில் சர்வீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.போன்ற தேர்வு எழுத திறமைகள் இருந்தும் பொருளாதாரம் இல்லாத மாணவ,மாணவிகளுக்கு உதவும் நோக்கில் சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமியை நடத்தி வருகிறார். சிவில் சர்வீஸ் கனவை அனைவரும் நனவாக்கலாம் எனும் முயற்சியோடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மாணவ,மாணவிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பாராதியார் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி.போன்ற தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சித்திரை செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் பாலகுருசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன்,ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பொன்னுசாமி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ்,கோவை மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி.பிரிவு அதிகாரி பாலாஜி சரவணன், கிருஷ்ணம்மாள் கல்லூரி முதல்வர் முனைவர் ஹாரத்தி,மகளிர் பாலிடெக்னிக் முதல்வர் ராஜேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ்.பயிற்சி அலுவலர் கனகராஜ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது குறித்த இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முக்கிய சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முக்கியத்துவத்தையும்,ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் வழங்கினர்.

குறிப்பாக `சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்கள், நகரத்தில் இருப்பவர்கள்,உயர்ந்த பயிற்சி வகுப்புகளில் படித்தவர்கள் போன்றவர்களால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற நிலையை தற்போது மாணவர்கள் மாற்றி வருவதாக குறிப்பிட்டனர். முன்னதாக சி.எஸ். கே.குளோபல் அகாடமியின் நிறுவனர் சித்ரை செல்வகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய சித்ரை செல்வகுமார், பொருளாதார ரீதியாக இது போன்ற தேர்வுகளை எதிர் கொள்ள முடியாமல் இருக்கும் மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவு நனவாகாமலே போகிறது. இதைப் போக்க வருடா வருடம் எங்கள் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதாக .கூறிய அவர்,தற்போது கிராம புற மாணவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் சி.எஸ்.கே. குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் இயக்குனர் செந்தூர் பாண்டியன்,செயல் இயக்குனர் ராஜேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.