• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒரு மழைக்குக் கூட தாங்காத கண்மாய்க் கரை! 17 கோடியை ஏப்பம் விட்டது யார்?

ByKalamegam Viswanathan

Sep 23, 2025

17.56 கோடியில் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட  கண்மாய் கரை- ஒரு மழைக்கு கூட தாங்காமல் மண் சரிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிகப்பெரிய ஒரு கண்மாயாக இருந்து வருவது மாடக்குளம் கண்மாய்.  

லட்சக்கணக்கான கன அடி தண்ணீர்  கொள்ளளவு கொண்ட இந்த கண்மாய் 104.3 ஹெக்டேர் பாசன பரப்பு கொண்டுள்ளது.  

தற்போது நகர மயமாதல் காரணமாக விவசாய நிலங்கள் குறைந்து வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் தண்ணீர் பெரும்பாலும் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது.  

சுமார் 3,400 மீட்டர் கரையின் நீளத்தில் மூன்று மதகுகள் உள்ள நிலையில் விவசாயத்தின் தேவைக்காகவே ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரானது அச்சம்பத்து வழியாக மாடக்குளம்  கண்மாய்க்கு வந்து சேரும்.  

கிட்டத்தட்ட கடந்த நான்கு வருடங்களாக நீர் நிறைந்து காணப்பட்ட இந்த கண்மாயில் தற்போது நீர் வற்றி வரக்கூடிய  நிலையில்…  

பொதுப்பணித்துறை மூலம் பதினேழு கோடியே 56 லட்சம் ரூபாய்  திட்ட மதிப்பீட்டில்  பசுமலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய போடி ரயில்வே லைன் முதல் பொன்மேனி மடைவரை கண்மாயின் இரண்டு புறங்களிலும் தடுப்புகள் அமைத்து கரையை பலப்படுத்தி செம்மண் சாலை அமைக்கும் பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது.  

ஒப்பந்ததாரர் கண்மாய் கரையில் தடுப்புகள் அமைக்கும் போது இப்பகுதி மக்கள் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது.  முறையான தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அப்போது எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

தொடர்ந்து கண்மாய்க் கரைகளின் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டு சாலை அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வந்தன.

சற்று ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செம்மண் சாலையாக காட்சியளிக்க கூடிய வேளையில் மாடக்குளத்தில் இருந்து தானத்துவம் புதூரை அடுத்து வராட்டிப்பத்து நோக்கி செல்லக்கூடிய பகுதியில் சில நாட்கள் முன் பெய்த கனமழையின் காரணமாக கான்கிரீட்  தடுப்புச் சுவர் உடைந்து அந்த பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.  

அந்த வழியாக  வந்த இளைஞர் ஒருவர், இதை  வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது.

இதனால் அவசரகதியாக ஒப்பந்ததாரர் தரப்பில்  இயந்திரம் கொண்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண்ணை கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

குறிப்பாக தென்பகுதியில் மிகவும் ஆழமாகவும் கொள்ளளவும் கொண்ட கண்மாய்களில் ஒன்றான மாடக்குளம் காட்மாயில் கரையை அகலப்படுத்துகிறோம் வளப்படுத்துகிறோம் என்கின்ற பெயரில் தற்போது நூதன திருட்டும் மோசடியும் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.

ஒருவேளை நீர் நிறைந்த இரவு நேரத்தில் இது போன்ற ஒரு உடைப்பு ஏற்பட்டிருந்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அசம்பாவிதமே ஏற்பட்டிருக்கும்.   மண் சரிவும் உடைப்பும் ஏற்பட்டபோது அந்த வழியாக வந்த இரண்டு சக்கர வாகன ஒட்டிகளுக்கு ஏதாவது உயிர் சேதம் போன்ற பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு பதில் கூறுவது யார் என்று கொந்தளிக்கின்றனர் மாடக்குளம் கிராம மக்கள்.  

திருவிளையாடல் புராணத்தில் வருவது போன்று வைகையிலே ஏற்பட்ட பெருக்கை அடைப்பதற்கு மண் சுமந்து பூம்படிபட்ட சிவபெருமானை போல,  நாங்களும் எங்கள் கண்மாய் கரைகளை  காப்பதற்காக வீட்டுக்கு ஒருவர் இனி சென்று காவல் காத்திட வேண்டுமா? என்று கேள்வி கேட்கிறார்கள்  மாடக்குளம் மக்கள்.