• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த கைதி தப்பி ஓட்டம்..,

BySeenu

Jun 13, 2026

கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ,ஆந்திராவைச் சேர்ந்த கைதி பிம்முடு அஜித்குமார் என்பவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , அதை OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு ஒரு சில லட்சங்கள் மட்டும் அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இவர் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார்.

ஆந்திராவில் இருந்து தப்பிய அவர் , திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல கார் விற்பனை செய்வது போல இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததை தொடர்ந்து , கோவை மத்திய சிறையில் இருந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டிற்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் இருந்து பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள பந்தய சாலை காவல் துறையினர் தலைமறைவான பிம்முடு அஜித் குமாரை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய அதே பாணியில் , தமிழக போலீசாரையும் பிம்முடு அஜித்குமார் ஏமாற்றி விட்டு தப்பினார். இது குறித்து பந்தயசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.