• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Byவிஷா

Apr 18, 2025

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல், டெல்லிக்கு பிரதமர் மோடி என்றும், தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியும் தலைமையாக இருப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறினார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது கூட்டணி மட்டும் தான் என தெரிவித்தார். அமித்ஷாவும் இதைத்தான் சொன்னார். அவர் சொன்னதை தவறாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர்” என விளக்கம் கொடுத்தார். இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா முடிவு செய்வார் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை, ”எடப்பாடி பழனிசாமி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஏதாவது கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறதா..? திமுகவை எதிர்க்க பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவர் சொன்னது காரணமாக கூட்டணி கட்சி தொடர்பாக அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் நான்தான் சென்று பேசினேன்.
அப்போதே அவர்கள் திராவிட கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கிறீர்களா என கேட்டார்கள். அதன் அடிப்படையில் தான் அப்போது கூட்டணி அமைக்கப்பட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுகவினர் கூட்டணி அமைத்தனர். மக்கள் நலனுக்காக எப்படி பாஜவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தாரோ, அதேபோல் தற்போது எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம். கூட்டணி என்ற நிலைமை வந்தபோது கூட வக்பு சட்டத்திற்கு எதிராகத்தான் நாங்கள் வாக்களித்தோம். திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. கடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திலேயே கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி கிடையாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை கிடையாது. இனியும் கிடையாது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக் கொள்கிறார்களோ, என்ன முடிவு செய்கிறார்களோ அதன்படி நடக்கும். தேவையின்றி சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கும் விதமாக நெல்லையில் அவரது ஆதரவாளர்கள் ‘வருங்கால முதல்வரே’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.