• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரெயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை.., பூட்ஸ் காலால் நெஞ்சில் சராமாரியாக மிதித்த போலீஸ் அதிகாரி..!

Byவிஷா

Jan 4, 2022

ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை போலீஸ் அதிகாரி காலால் மிதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. அந்த ரெயில் வடகரா ரெயில் நிலையத்தை தாண்டிச் சென்று கொண்டு இருந்த போது அந்த ரெயிலில் உள்ள முன்பதிவு செய்யும் பெட்டியில் பயணித்த கண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத், திடீரென்று அந்த ரெயிலில் பயணித்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்ததாக தெரிகிறது.


அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் அந்த நபரை கீழே தள்ளிவிட்டு தனது ஷ_ காலுடன் அவருடைய நெஞ்சில் சரமாரியாக மிதித்தார். இதை பார்த்து அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தடுத்தனர். இருந்தபோதிலும் அவர் அதை பொருட்படுத்தாமல் அந்த நபரை தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருந்தார்.


இந்த சம்பவத்தை அதே பெட்டியில் பயணித்த நபர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


மேலும் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரெயிலில் டிக்கெட் பரிசோதிக்க அதிகாரம் இல்லை என்றும், இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை மீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கண்ணூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், தவறு இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்து உள்ளார்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சமீபகாலமாக போலீசார் மீது புகார்கள் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது. எனவே உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றார்.