தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனி மாணவர் விடுதி அருகில் வசித்து வருபவர் மணிகண்டன் (42) இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சொந்தமாக டேபிள் சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த இவர் சம்பவம் நடந்த அன்று போடி சாலை காளியம்மன் கோவில் பகுதியில் சங்கரப்பன் கண்மாய் அருகில் உள்ள ரமேஷ் என்ற நபருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் மணிகண்டன் குளிக்கச் சென்ற பொழுது தடுமாறி கிணற்றின் ஆழமான பகுதிக்குள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவரைக் காப்பாற்ற நண்பர்கள் முயற்சித்து முடியாத நிலையில் உடனடியாக போடி தாலுகா காவல்துறையினர் மற்றும் போடிநாயக்கனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கிய மணிகண்டனை சடலமாக மீட்டனர்.
இறந்த மணிகண்டன் உடலை போடி தாலுகா காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.