• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பந்தலூரில் புல்லட் ராஜாவை விரட்ட புதிய உத்தி

Byவிஷா

Dec 24, 2024

பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் புல்லட்ராஜா என்ற யானையை விரட்ட வனத்துறையினர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர்.
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’ காட்டு யானையின் இருப்பிடத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அரிசி சுவைக்கு பழக்கப்பட்ட இளம் ஆண் காட்டு யானை ஒன்று, நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு வருகிறது. மிகவும் பலவீனமான நிலையில் உள்ள அந்தக் குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ளே நுழைவது எளிதாக இருப்பதால், ‘புல்லட் ராஜா’ யானை அந்த பகுதிகளிலேயே தொடர்ந்து நடமாடி வருகிறது.
நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தனிக்குழு அமைத்து யானையைக் கண்காணித்து வந்த நிலையில், யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானையின் சாணத்தினாலான ஸ்பிரே, புகை மற்றும் மிளகாய் தூள் தடவப்பட்ட துணி தோரணம் என மாற்று வழிமுறைகளில் களம் இறங்கியிருக்கிறது வனத்துறை.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியின் சுவைக்கு பழக்கப்பட்ட இந்த யானை, இரவில் ஊருக்கு வருகிறது. ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள், இரவிலும் கண்காணிக்க தெர்மல் கேமரா என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மதம் பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும் என்பதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் சாணத்தைச் சேகரித்து வந்து பல பகுதிகளிலும் தெளித்து வருகிறோம்.

யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது. வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

வனத்துறையின் இந்த நூதன முயற்சி பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.