சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை வந்த இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி வைத்தார்.,
அதில் 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அதற்காக இந்தியாவுக்கு சவுதி அரேபிய அரசு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக சவுதி அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், 2027-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையும் தடையின்றி சிறப்பாக நடைபெறும் என்றார்.

2027-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணிகளின் தேர்வு செயல்முறை நிறைவடைந்துள்ளதாகவும், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு காலியாகும் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
தனியார் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஹஜ் டூர் ஆபரேட்டர்களை மட்டுமே அணுகி பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், 2027-ஆம் ஆண்டு அரசு மூலம் ஹஜ் செல்லும் சுமார் 1.25 லட்சம் பயணிகளுக்கு சவுதி அரசே குறைந்த கட்டணத்தில் மூன்று வேளை உணவு வசதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது ஹஜ் பயணிகளுக்கு முக்கியமான சிறப்பம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த அபுபக்கர், நாட்டில் சுமார் 40 கோடி இஸ்லாமியர்கள் வாழும் நிலையில், மத்திய அமைச்சரவையில் தற்போது ஒரு இஸ்லாமிய கேபினட் அமைச்சர் கூட இல்லாதது வருத்தமளிப்பதாக கூறினார். குலாம் நபி ஆசாத், ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்றோர் முன்பு அமைச்சரவையில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த அவர், விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது இந்திய ஹஜ் சங்கத்தின் கோரிக்கை என தெரிவித்தார்.

மேலும், ஹஜ் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளில் இஸ்லாமிய அமைச்சர் இருப்பது நடைமுறை ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மக்கா போன்ற புனித நகரங்களுக்கு முஸ்லிம்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால், இது சர்வதேச அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் வலியுறுத்தினார். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பு வாயிலாக கோரிக்கை விடுத்தார்.




