குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி உலக அளவில் பட்டாசு உற்பத்திக்கு சிறந்து விளங்குகிறது. இந்த தொழிலில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் முழுக்க முழுக்க தங்களது உடல் உழைப்பால் பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்ய தங்களது கடின உழைப்பை செலுத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடிப்பதன் மூலம் நாட்டு மக்களை மகிழ்விக்கும் பட்டாசு தொழிலாளர்களின் கடின உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரின் நுழைவு வாயிலான காரனேசன் சந்திப்பு பகுதியில் புதிதாக ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். கை உழைப்பால் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளங்கையில் சிறுவன் பட்டாசு வெடித்து மகிழும் வடிவில் நினைவு சிலை வடிமைக்கப்பட்டுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி சிவகாசி நெடுங்குளம் ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 4 லட்சமும், பலத்த காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ 1 லட்சமும்,லேசான காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்.