• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடந்த பாரம்பரிய காய்கறி திருவிழா..! தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Nov 5, 2023

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் பேசுகையில் “இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது. மேலும் ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்” என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.ராமர் பேசுகையில் “நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்” எனக் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி திரு. பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.

அவரை தொடர்ந்து பாரம்பரிய காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து காய்கறி வைத்தியர் திரு. அருண் பிரகாஷும், வீட்டின்ஆரோக்கியம் வீட்டுத் தோட்டத்திலே என்ற தலைப்பில் விதை பாதுகாவலர். விதைதீவு திருமதி பிரியா அவர்களும், முருங்கையை மதிப்புகூட்டுவதன் மூலம் மலைக்க வைக்கும் வருவாய் பெற முடியும் என்பது குறித்து திண்டுக்கல் விவசாயி திருமதி. பொன்னரசி அவர்களும் பல காய்களை கூட்டாக வளர்த்தால் வருமானம் கூடும் என்பதை குறித்து கோவை முன்னோடி விவசாய விஜயன் அவர்களும், பந்தல் காயில் ஊடுபயிர் செய்வது குறித்து காஞ்சிபுரம் முன்னோடி விவசாயி .ஜனா மற்றும் கீரை சாகுபடி மூலம் தினசரி பணம் ஈட்டுவது எப்படி என்பதை பற்றி ஆத்தூரை சேர்ந்த முன்னோடி விவசாயி கோகுல் நாத் பேசினார்கள்.

அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.