தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தனியாருக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்த அரசு மருத்துவமனையானது, தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர பகுதியில் இருந்து குண்டாறு செல்லும் சாலையில் உள்ளது. இந்த அரசு மருத்துவமனைகளில் கட்டிடங்கள் கேரள கலை நுட்பத்துடன் இருக்கும் சூழலில், அந்த கட்டிடங்கள் அனைத்தும் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டன. இந்த நிலையில், அந்த மருத்துவமனைக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தலைமை மருத்துவராக பொறுப்பேற்ற ராஜேஷ் கண்ணா என்பவர் மருத்துவமனையை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு தன்னார்வலர்களை அணுகி அரசு மருத்துவமனையின் தேவைகள் குறித்து எடுத்துரைத்து பல தன்னார்வலர்களின் உதவிகளைப் பெற்று தற்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இல்லாத அடிப்படை வசதிகளே இல்லை என்று கூறும் அளவிற்கு சிறந்த மருத்துவமனையாக தரம் உயர்த்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே மூலிகை பூங்காக்கள், சுற்றுச்சூழல் பூங்காக்கள் உள்ளிட்ட பூங்காக்களை அமைத்து மூலிகை பூங்காக்களில் உள்ள அரியவகை மூலிகை செடிகளை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குதல். மேலும், சிறுவர், சிறுமிகள் விளையாண்டு மகிழ பூங்காக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களது பொழுதை கழிப்பதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே நூலகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து, தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இந்த அரசு மருத்துவமனையானது தற்போது செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 2021 மற்றும் 22 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து பல்வேறு விருதுகளை வழங்கினர். அந்த வகையில், நாட்டிலே சிறந்த மருத்துவமனைக்கான விருதை இந்த செங்கோட்டை அரசு மருத்துவமனை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது இந்த மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் நுணுக்கமான அறுவை சிகிச்சைகளை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.