மதுரையிலிருந்து அரசு பேருந்து நாட்டரசன் கோட்டை பகுதிக்கு செல்வதற்காக சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளது. இந்த பேருந்தை ஓட்டுநர் கிறிஸ்துதாஸ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்தை சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய போது திடீரென பேருந்தில் தீ பற்றியது. பேருந்தின் என்ஜினில் இருந்து அதிக சத்தத்துடன் புகை கிளம்பியதால் அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. பேருந்து மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் அரசு பேருந்தின் எஞ்சின் சத்தத்தை கேட்டு அலறி அடித்து ஓடினர். அக்கம் பக்கத்தில் இருந்த சாலையோர கடைகளும் உடனடியாக அகற்றப்பட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக பேருந்தில் இருந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் சிவகங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.