சிவகங்கையில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் பணிமனையை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜி. பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற வேட்பாளர் சேவியர் தாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி ,கோபி, செல்வமணி , அருள் ஸ்டீபன் மற்றும் இளைஞர் அணி பாசறை பிரபு என ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது நிர்வாகிகளிடம் பேசிய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் இன்று திறக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை இதுவரை நமக்கு வெற்றிகளை மட்டுமே தந்துள்ளது. ஆகையால் நமது வெற்றி உறுதியாகியுள்ளது.

நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம் ஜி ஆர், புரட்சி தலைவி அம்மா போன்று அவர்களின் கொள்கை கோட்பாடுகளை செயல்படுத்தும் வலிமை மிக்க தலைவராக அம்மாவின் மறு உருவமாக உருவெடுத்து தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்ட தலைவராக உள்ளார். புரட்சித்தலைவர், புரட்சி தலைவி அம்மா போன்று கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் பாராளுமன்ற வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். போர்க்களத்தில் நின்று கொண்டு ஒப்பாரி வைக்காத தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் சாமியே சரணம் என்று காவி வேட்டி அணிந்து கொண்டுள்ளனர். நமது கழக நிர்வாகிகள் அதிமுக ஆட்சியில் அம்மா அவர்களால் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை இந்த விடியா திமுக அரசு செயல்படுத்தாமல் நிறுத்தி உள்ளதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு போய் சேர்த்து நமது வேட்பாளரை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து எடப்பாடியார் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று பேசினார்.
