• Fri. Oct 10th, 2025

சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

ByG.Ranjan

Sep 13, 2024

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஒன்றிய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை.!- மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு!! நல்ல நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசியலாக்குவது தவறானது எனவும் கருத்து…

சிவகாசியிலுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம்தாகூர், சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அரசன் அசோகன், இஎஸ்ஐ மருத்துவமனையின் இணைஇயக்குனர் டாக்டர் அசோகன் தலைமையிலான மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மருத்துவமனை மேம்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் மத்திய அரசின் நிதியிலிருந்து பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. மாணிக்கம் தாகூர்:-

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முதலமைச்சரின் நேரடி பார்வையிலுள்ள காவல் துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் கூறும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் காவல்துறையின் பணி சிறப்பாக உள்ளது, இருந்த போதிலும் தமிழக காவல் துறையை மென்மேலும் மேம்படுத்த வேண்டு மென்பதை வலியுறுத்துவோம்.

எந்த ஒரு முதல்வரின் வெளிநாட்டு பயணமும் அந்தந்த மாநிலங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு முதலீட்டு பயணம் தென் மாவட்டங்களை புறக்கணிக்காமல் தொழில்களை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொழில் வெறும் கனவாகி விடாமல் மெய்ப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட ஒன்றிய அரசின் அகங்காரத்தின் அடுத்த நிலை.

இந்த செயல்பாடு இந்தியா முழுவதுமுள்ள ஜிஎஸ்டி வரி கட்டும் தொழில் முனைவோர்களை மிரட்டுவதற்கான ஆதாரமாகவே கருதுகிறோம். பெரிய- நடுத்தர அளவிலான தொழில் செய்பவர்களை மிரட்டும் ஒன்றிய அரசு, சிறு-குறு தொழில் நிறுவனங்களை எப்படி எல்லாம் மிரட்டும் என்ற அவர், அதானி- அம்பானி தவிர மற்றுமுள்ள தொழில் முனைவோர்களை ஒன்றிய அரசு மிரட்டி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பியவர்களை மிரட்டுவது ஒன்றிய அரசின் அயோக்கியத்தனத்தின் உச்சகட்டமாகும். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

நல்ல நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை அரசியலாக்குவது தவறானது. மதவாத, ஜாதிவாரி கட்சிகள் தவிர மற்ற அனைவருக்கும் மாநாட்டில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் மதவாதத்தை அனைவரும் எதிர்த்து, இந்திய வெறுப்பு அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு பற்றி சிந்திப்பது அவசியமான ஒன்று.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் பட்டாசு தொழில் நஷ்டமடையாமல் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் அனைத்து மாநில அரசுகளும் அனுமதி யளிக்க வேண்டும். பட்டாசு தொழில் என்றாலும், வந்தே பாரத் ரயில் நிற்பதாகட்டும், ஒன்றிய அரசு விருதுநகர் மாவட்டத்தை வஞ்சிக்கிறது. நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக பட்டாசு தொழிலுக்கான தனிச்சட்டம் இயற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான முன்வரைவு வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்கும் விதமாக புதிய தனிச்சட்டம் இருக்க வேண்டும். பட்டாசை பழிவாங்கும்-பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக புதிய சட்டம் இருக்கக் கூடாது. பட்டாசு தொழிற்சாலை பிரச்சனை குறித்து நாக்பூரிலுள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லாமல், சிவகாசியிலுள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் மூலமாகவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம் என்றார்.