மாட்டுபொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (16 ஆம் தேதி) மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்குச் சென்ற பார்வையாளரான மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த செல்வராஜ் (66) மாட்டின் கயிறு காலில் சிக்கி கீழே விழுந்ததோடு. மாடு முட்டியதில் தலையில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது

இதையடுத்து செல்வராஜின் உடலானது பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது
இது குறித்து மதுரை பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால் போட்டி 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இதன் காரணமாக அவசர அவசரமாக காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் ஆங்காங்கே தடுப்புகளை தாண்டி வந்த நிலையில் போதிய பாதுகாப்புகளை அமைக்காததால் காயம்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தன.
எனவே காயமடைந்து உயிரிழந்த செல்வராஜின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





