• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை 8 லட்சத்திற்கு விற்பனை – 5 பேர் கைது.., 4 பேருக்கு போலீசார் வலை…

ByKalamegam Viswanathan

Aug 29, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பழகி முறை தவறிய உறவிலிருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த 17 வயது சிறுமி கடந்த ஏழாம் தேதி பிரசவத்திற்காக பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 20 நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமியும் குழந்தையும் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டனர். இத்தகவல் சந்தையூர் கிராம செவிலியர் காந்திமதிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காந்திமதி நேரடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். மேலும்., குழந்தையை பார்க்க வேண்டும் என கூறியதற்கு குழந்தை தன் தாயுடன் வெளியில் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்., செவிலியர் கேட்கும் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த செவிலியர் காந்திமதி பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் பேரையூர் காவல் ஆய்வாளர் மதனகலா தலைமையிலான போலீசார் சிறுமியின் தாய் மாரியம்மாளிடம் (45) விசாரித்த போது குழந்தையை தனது உறவினரான மெய்யனூத்தம் பட்டியை சேர்ந்த சுந்தரலிங்கம் (48)என்பவரிடம் விற்பதற்காக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இனைத்தொடர்ந்து., போலீசார் சுந்தரலிங்கத்திடம் விசாரித்த போது குழந்தையை விற்கச் சொல்லி உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச்செல்வன் என்பவரிடம் கொடுத்ததாகவும் அவர் ஈரோடு மாவட்டம் பெரிய புலியூத்தை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரிடம் குழந்தையை விற்கச் சொல்லிக் கொடுத்ததாகவும்., குழந்தையை பெற்றுக் கொண்ட கார்த்திக் பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (50) சீனிவாசன் (38) ஆகியோரிடம் கொடுக்க அவர்கள் இருவரும் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வரி (36) என்பவரிடம் ரூபாய் 8 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தேஜஸ்வரிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளதாகவும் ஆண் குழந்தை இல்லாததால் குழந்தையை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீசார் தேஜஸ்வரி உட்பட அனைவரையும் பேரையூர் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி விசாரணை நடத்தி மாரியம்மாள், கார்த்திக்கேயன் சுந்தரலிங்கம், சீனிவாசன், தேஜஸ்வரி ஆகிய 5 பேரை கைது செய்த நிலையில் சம்பவத்தில் செவிலியர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து., தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் தாமரைச்செல்வன், கார்த்திக், செவிலியர் உட்பட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தை காணாமல் போனது தொடர்பாக நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்., சம்பந்தப்பட்ட வழக்கில் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த பேரையூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் பாராட்டி உள்ளார்.

தகாத உறவால் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் ஒவ்வொருவர் கைக்கு மாறி., மாறி பல கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு விலைக்கு விற்கப்பட்ட சம்பவம் பேரையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.