• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

துருக்கியில் 6வயது சிறுமியை உயிருடன் மீட்ட..,இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்..!

Byவிஷா

Feb 11, 2023

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த இரு நாடுகளும் உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 என்கிற அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாலும், 40 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளாலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகியுள்ளன. எங்கு பார்த்தாலும், கட்டிடக் குவியல்கள், மனித உடல்களாக காட்சியளிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதேபோல் இந்தியாவும், மீட்பு குழு, நிவாரண பொருட்கள், மருந்து பொருட்கள், மீட்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளது. ‘ஆபரேஷன் தோஸ்த்’ திட்டத்தின் கீழ், ஆறு விமானங்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தின் நுர்டஹி பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 6 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர். தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துருக்கியில் இந்திய மீட்புக்குழுவினர் இதுவரை 2 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது