விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 5ம் வகுப்பு பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே மம்சாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ராமசாமி- பட்டாசு தொழிலாளி பழனியம்மாள் தம்பதியினர் மகன்கள் ஜெகதீஸ்வரன்( வயது 10) மற்றும் விக்னேஸ்வரன்( வயது 8) சகோதரர்கள் இருவரும் மம்சாபுரத்தி லுள்ள பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மம்சாபுரம் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருந்த விநாயகர் சிலைகள் கிராமத்தில் பயன்பாடற்ற நிலையிலிருந்த கிணற்றில் கரைக்கப்பட்டன.
தங்கள் வீட்டிலிருந்த சின்ன, சின்ன விநாயகர் சிலைகளை அதே கிணற்றில் தனது சகோதரனுடன் கரைக்க சென்ற ஜெகதீஸ்வரன் (வயது 10) கிணற்றினுள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.