• Tue. Apr 30th, 2024

இறுதிபோட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. சிட்னியில் இன்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி நியூசிலாந்து அணியின் சார்பில் பின் ஆலென் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பின் ஆலென் 4 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து டிவான் கான்வேவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பீல்டிங் காரணமாக தொடர்ந்து ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணியினர் போராடினர். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார். மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் 32 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
முடிவில் டேரில் மிட்செல் 53 (35) ரன்களும், ஜேம்ஸ் நீஷம் 16 (12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், முகமது நவாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர். ஆரம்பம் முதலே அதிரடியை துவங்கிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் இவர்களின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் பாபர் அசாம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 53 (42) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் 36 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இதனிடையே அடுத்ததாக களமிறங்கிய முகமது ஹாரிஸ், முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டார். இந்த சூழலில் முகமது ரிஸ்வான் 57 (53) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் அதிரடி காட்டி வந்த முகமது ஹாரிஸ் 30 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ஷான் மசூத் 3 ரன்களும், இப்திகர் அகமது ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 உலகக் கோப்பையின் இறுதிபோட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. நாளை நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியில் வெல்லும் அணி, பாகிஸ்தானை இறுதிபோட்டியில் வரும்
ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *