• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மின்கம்பியில் திடீர் கோளாறு
மின்சார ரயில் சேவை பாதிப்பு

மின்கம்பியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று காலை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் 10 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் மேல் பகுதியில் உள்ள மின்னழுத்த கம்பியின் பேண்டோகிராப் கருவியில் உள்ள ஒரு பகுதியானது சேதம் அடைந்து உடைந்து கீழே விழுந்தது. மின்சார ரயில் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை சேகரித்து ரயிலை இயக்குவதற்கு பேண்டோகிராப் கருவி உதவுகிறது. இந்த கருவி சேதம் அடைந்ததால் மின்சார ரயிலின் இயக்கம் தடைபட்டது. இதனால் உடனடியாக எழும்பூர் ரயில் நிலையத்திலேயே அந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் 40 நிமிடங்கள் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே ரயில் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் மற்ற ரயில் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடற்கரை நோக்கியும், தாம்பரம் நோக்கியும் சென்று கொண்டிருந்த 4 மின்சார ரயில்கள் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் பேண்டோகிராப் கருவி சரி செய்த பின் மின்சார ரயில் புறப்பட்டு, கடற்கரையை சென்றடைந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்வோர் சிரமப்பட்டனர். ஓட்டமும், நடையுமாக ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி பஸ்களிலும், ஆட்டோக்களிலும் அலுவலகத்திற்கு சென்றனர்.