• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 10, 2022

நற்றிணைப் பாடல் 39:

சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல் நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

பாடியவர் மருதன் இளநாகனார்
திணை குறிஞ்சி

பொருள்:
நான் பேசுகிறேன்; நீயோ, பேசாமல் உன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நிற்கிறாய். காதலில் அன்பு மிகுந்து விட்டால் தாங்கமுடியுமா? (வன்முறை அன்றோ நிகழ்ந்துவிடும்) கடைமணி மட்டும் சிவந்துள்ள உன் கண்களிலோ சினம் தெரியவில்லை. கரும்பு எழுதிய உன் தோள்களோ என்னை வருத்துகின்றன. என்ன செய்வேன்? – என்கிறான் அவன். இரண்டாம் நாள் கூட்டத்துக்கு முன்பு இது நிகழ்கிறது. கடைமணி சிவந்த கண் – புலி முதுகில் குத்தி விளையாடிய ஆண்யானையின் தலையில் இருக்கும் தந்தக்கொம்பு போல் கடைமணி சிவந்துள்ள கண்.
கரும்புடைத்தோள் – கரும்பு உருவம் எழுதிய தோள் – கூடல் (மதுரை) நகரம் போன்று இன்பம் தரும் தோள். கூடல் – பெரும்பெயர்க் கூடல் – அடுபோர்ச் செழியன் ஆட்சிக் காலத்துக் கூடல். செழியன் – பகைவர் தனக்கு அரணாகக் கோட்டை மதிலுக்குள் இருக்கையில் அவர்களது முரசினைக் கைப்பற்றி முழக்கி வெற்றி கண்டவன். – அடுபோர்ச் செழியன்