• Mon. Apr 29th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 9, 2022

நற்றிணைப் பாடல் 38:
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்
புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே.

பாடியவர் உலோச்சனார்
திணை நெய்தல்

பொருள்:
தோழியே! காண்டவாயில் என்னும் நமது ஊர் கலங்கிய தண்ணீருடன் மரத்தடிகளாலான கால்கள் சூழ்ந்த தோட்டங்களையும், முற்றிய பனையோலையையும், முட்களையும் சேர்த்து அடைக்கப்பட்ட வேலிகளையும் கொண்டது. உயர்ந்து வளர்ந்த பனைமரங்கள் அங்குள்ளன. அங்கேயிருக்கும் வெண்மணல் திடலிலே உள்ளது சந்தடிமிக்க நமது சேரிப்பகுதி. கடலில் மீன்பிடித்தல் என்பது என்றுமே தவறாமல் நடைபெறும் சிறப்பு நமது ஊருக்கு உண்டு. மீனவர்கள் கிடைத்த மீன்களைப் பொய்யுரைக்காது வரிசெலுத்தி, விலைகூறி விற்றுக் கொண்டிருப்பார்கள். அங்கே கருமையான பனையின் இனிமையான கள்ளைக் குடித்தவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். இவ்வாறு வளமும், மகிழ்ச்சியும், ஆரவாராமும் உடையதாக நமது ஊர் இருந்தாலும், தேரில் வந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறவனும், கடல் சூழ்ந்த நாட்டை உடையவனுமான நம் தலைவன் நம்மைப் பிரிந்திருப்பதனால் இவையெல்லாம களையிழந்து கிடப்பனபோல நமக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றவையாய் உள்ளனவே! நான் என்ன செய்வேனடி? என்று தலைவி தோழியிடம் கேட்பது போல இப்பாடல் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *