• Wed. May 1st, 2024

செப்1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு-ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…!

ByA.Tamilselvan

Aug 27, 2022

“சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்று, ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக் கட்டணத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக் கொண்டு வருவதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.ஏற்கனவே சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், சுங்கக் கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, கடும் கண்டனத்திற்குரியது.
சுங்கக் கட்டண உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும், வாகன உரிமையாளர்களையும், பாதிக்கும் செயலாகும்.இந்தக் கட்டண உயர்வை அடுத்து, வாகன உரிமையாளர்கள் வாகனத்திற்கான கட்டணங்களை உயர்த்தும் சூழ்நிலை உருவாகி, அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் சூழ்நிலை ஏற்படும்.
எனவே, உயர்த்தப்படவுள்ள சுங்கக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், விதிகளுக்கு ஏற்ப சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து, ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைவரின் நலனையும் காக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *