உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் அண்மையில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தியின் போது இரு தரப்பு மக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கலவரத்தால் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையும், அக்சய திருதியை பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடப்படவுள்ளன. இதனை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ரம்ஜான், அட்சய திருதியை பண்டிகைகளின் போது எந்தவிதமான மோதலும், அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என காவல்துறையினருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும், வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறும் போலீஸாருக்கு அவர் அறிவுறுத்தினார். டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த கலவரத்துக்கு ஒரு வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியும் ஒரு காரணம் என தெரியவந்ததை அடுத்து, இந்த உத்தரவை யோகி பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளை போலீஸார் வேகமாக அகற்றி வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டிருப்பாதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறைந்த அளவிலான ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)