• Tue. Apr 30th, 2024

துணை வேந்தர்கள் நியமனத்தில் அடுத்து என்ன நடக்கும்?

மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகை செய்யும் இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில், திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதனால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி தாமதம் செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது. மேலும், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாமல தமிழக அரசு புறக்கணித்தது.

இதனிடையே, டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள சுதா சேஷய்யனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டு 3 பெயர்கள் பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த 3 பெயர்களை தவிர்த்துவிட்டு, தற்போது துணை வேந்தராக உள்ள சுதா சேஷய்யனின் பதவிக்காலத்தை டிசம்பர் இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதலின் முக்கியமான புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகை செய்யும் இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றால், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம். ஆனால், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது இரண்டு அதிகார மையங்களை உருவாக்கும் என்று உயர்கல்வித் துறை நிர்வாகம் சார்ந்த சீனியர்கள் கூறுகின்றனர்.

மேலும், மாநில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை மட்டும் மாநில அரசுக்கு மாற்றுவது கல்வி விவகாரங்களில் மோதலுக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்களும் வல்லுநர்களும் கூறுகின்றனர்.

இது குறித்து சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர்நேசன், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ‘ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது ஒரு சிறிய பிரச்னை. ஆளுநர் தொடர்ந்து வேந்தராக இருந்தால், அவர் பல்கலைக்கழகங்களின் தலைவராக இருப்பார். முக்கியமான விஷயங்களில் அவரது ஒப்புதல் தேவைப்படும். அரசியல் தலைவர் அல்லது முதல்வர் வேந்தராக உலகில் எங்குமே இல்லை. இந்தியாவில்கூட, மத்தியப் பல்கலைக் கழகங்களில் குடியரசுத் தலைவரைப் பார்வையாளராக இருக்கிறாரே தவிர, வேந்தராக இல்லை,’ என்று கூறுகிறார்.

ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பதற்கு சிறந்த கல்வியாளர் அல்லது கல்வியில் அறிவுள்ள ஒருவரை மட்டுமே நியமிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, இந்த முடிவு துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ஏற்படுத்தும் என்று கூறினார். ‘துணைவேந்தர்கள் அரசியல் சார்பு கொண்டவர்களாக இருந்தால், ஆசிரிய உறுப்பினர்கள் நியமனம் முதல் நிர்வாகம் வரையிலான முழு செயல்முறையிலும் அரசியல் செல்வாக்கு செலுத்தும். இது உயர்கல்வியின் தரத்தை நேரடியாக பாதிக்கும்’ என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்கலைக்கழகத் தலைவர்கள் பல்கலைக்கழக வாரியங்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்று உயர்கல்வித்துறையினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இதுவரை ஒரு பல்கலைக்கழகத்துக்கு, தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூன்றில் ஒருவரை மாநில ஆளுநர், துணைவேந்தராக தேர்வு செய்யும் நடைமுறை இருக்காது.

அதற்கு பதிலாக, தேர்வுக்குழு பரிந்துரை மீது தமிழக அரசே முடிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *