• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – அரசாணை வெளியீடு

By

Sep 2, 2021

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், “ ஒன்றாம் வகுப்பு முதல் 10, 12ம் வகுப்புகள், பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டங்கள் முழுவதுமாக தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள்.

இதர மொழிகளை பயிற்று மொழியாக பயின்று தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இதற்கு தகுதியடையவர் அல்லர். 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயின்று, பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்களும் இம்முன்னுரிமைக்கு தகுதியடையவர்கள் அல்லர்.

கல்வித் தகுதி சான்றிதழ் மாற்றம் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட தெரிவு முகமைகள்/ நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.