• Mon. Apr 29th, 2024

புதிய நவீன தரவு மையம்.. இரயில்வே துறை அசத்தல்!

தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் வழங்குவதற்கான தகவல்களை அளிக்கும் தரவு மையம் 1985 ஆம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட் ரயில்வே அலுவலகத்தில் அமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பயணச்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் மற்றும் தினந்தோறும் ஒன்பது லட்சத்திற்கு அதிகமான பயணச்சீட்டுகள் வழங்க காரணமாக அமைந்துள்ள தரவு மையத்தில் இடநெருக்கடி மற்றும் பெருகி வரும் போக்குவரத்திற்கு ஏற்ற வகையிலான அலுவலக அமைப்பு இல்லாதது ஆகியவை பெரும் குறையாக இருந்தது.

எனவே சென்னை மூர்மார்க்கெட் ரயில்வே அலுவலக இரண்டாவது மாடியில் புதிய நவீன தரவு மையம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய மையத்தில் விசாலமான அரங்கில் தகவல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 16 அலமாரிகளில் தகவல் கருவிகளும், 10 அலமாரிகளில் தொலைத்தொடர்பு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன .

இந்த தரவு மையத்தை கண்காணிக்கும் பயணிகள் போக்குவரத்து முதன்மை வர்த்தக மேலாளர் அலுவலகம், ரயில்வே தகவல் அமைப்பு மையம், கட்டுப்பாட்டு மையம், தகவல் மேலாண்மை அலுவலகம் ஆகியவையும் விசாலமான முறையில் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

தடையில்லா மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள், மேம்பட்ட குளிர்சாதன வசதி, தீ விபத்து ஏற்படுவதை கண்டறிவது மற்றும் தானியங்கி தீயணைப்பு முறை, கண்காணிப்பு கேமரா மற்றும் தொடர் பாதுகாப்பு ஏற்பாடுகள், மழைநீர் உட்புகுவதை தடுக்கும் கருவி, பூச்சிகளை அழிக்கும் கருவி, ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை திட்டம், நவீன உட்கட்டமைப்பு, சீரான கம்பி வட அமைப்பு, இணைப்பில்லா இணையசேவை மற்றும் பொது அறிவிப்பு கருவி ஆகியவை இந்த புதிய மையத்தின் சிறப்பு அம்சங்களாகும். இந்தப் புதிய மையம் ரூபாய் 14.31 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *