• Tue. Apr 30th, 2024

சென்னை ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் பெண் மேயர் யார்?

சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், இவர்களில் யார் சென்னையின் மேயர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பெண்களாக உள்ளனர். இந்நிலையில் சென்னை மேயர் பதவியானது, பட்டியல் இன பெண்ணுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற கேள்வி எழுந்துள்ளது.

திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற 23 வயதான பிரியா ராஜன், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீதனு சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 23 வயதான பிரியா ராஜன் எம்.காம் முதுநிலை பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீதனு சந்திரசேகர், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உள்ளார். முதலமைச்சரின் தொகுதியில் வசிக்கும் இவருக்கு, திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இதேபோல, ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 111 வது வார்டில் இருந்து தேர்வான நந்தினி என்பவரின் பெயரும் மேயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் வழக்கறிஞராக உள்ளார்.

திமுகவை பொறுத்தவரையில், வடசென்னை பகுதியில் இதுவரை யாரும் மேயராக இருந்ததில்லை. அதனால் இம்முறை வட சென்னையை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ஏற்கெனவே சென்னையில் மேயர்களாக இருந்த மா.சுப்பிரமணியன் & ஸ்டாலின் ஆகியோர் தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில், துணை மேயர் பதவி யாருக்கென்பதும் எதிர்பார்ப்புக்குரிய விஷயமாகி உள்ளது. இந்தப் பதவி, 110-வது வார்டில் வெற்றி பெற்ற சிற்றரசுக்கு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இவர், உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி வரக்கூடிய திமுக மேற்கு மாவட்டத்தின் செயலாளராக உள்ளார்.
இதே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்றுள்ள மதன்மோகன் என்பவரும் துணைமேயர் பதவிக்கு போட்டி காண உள்ளதாக தெரிகிறது. ராயபுரம் பகுதியில் மற்றொரு திமுக வேட்பாளராக வெற்றி பெற்றுள்ள இளைய அருணா என்பவரும் துணை மேயர் பதவிக்கு விரும்புவதாக தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து மேயர், துணை மேயருக்கான எதிர்ப்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *