• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹிஜாப் சர்ச்சை பின்னணியில் பிரதமர் மோடி ?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.
நாட்டில் ஹிஜாப் குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் வாக்குகளுக்காக முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், நமது முஸ்லிம் சகோதரிகள் மோடியைப் புகழ்வதைப் பார்த்த எதிர்க்கட்சியினர் அவர்களைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். முஸ்லிம் பெண்கள் மோடியை புகழ்வதைத் தடுக்க, முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு இடையூறாக புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள்.’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘பாதிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் பெண்களுடணும் பாஜக அரசு ஆதரவாக நிற்கும் அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் முஸ்லிம் சகோதரிகளை ஏமாற்றுகிறார்கள், இதனால் முஸ்லிம் மகள்களின் வாழ்க்கை எப்போதும் பின்தங்கியுள்ளது’ என்று கூறினார். 2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவரம், 2017-ல் சஹாரன்பூரில் நடந்த வன்முறைகள் அரசியல் ஆதரவின் கீழ் மக்கள் எவ்வாறு குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்று என்று பிரதமர் மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் மோடி, ‘உத்தரபிரதேசத்தை முன்னேற்றுபவர்களுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைக் கலவரம் இல்லாமல் வைத்திருப்பவர்கள், நம் தாய் மற்றும் மகள்களை அச்சமின்றி வைத்திருப்பவர்கள், குற்றவாளிகளை சிறையில் அடைப்பவர்கள் யாரோ அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் போலியான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அவர்கள் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், உத்திரப்பிரதேசம் முழுவதும் இருளில் மூழ்கியது’ என்று கூறினார்.

சமாஜ்வாடி கட்சி வாரிசு அரசியல் மூலம் போலி சோசலிசத்தில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ‘சோசலிஸ்டுகளான லோகியா ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார் அவர்களின் குடும்பத்தினரை அரசியலில் பார்க்க முடியுமா? சமாஸ்வாடியில் இருந்து 45 பேருக்கு சில பதவிகள் அளிக்க வேண்டும் என்று எனக்குக் கடிதம் வந்தது. இந்த வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்றார்.

அரசாங்கத்திற்கு வியாபாரம் செய்வது வேலை இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, சிறு விவசாயிகள், சாலைகள் அமைப்பது, பொதுமக்களுக்கான இதர வசதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.