• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்யுங்கள்-ராஜேந்திர பாலாஜி

Byகாயத்ரி

Feb 10, 2022

அதிமுகவின் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விருதுநகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கலாநிதி முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமார், விருதுநகர் நகர செயலாளர் நெய்னார் முஹம்மது, பொதுக்குழு உறுப்பினர் அருணாநாகசுப்பிரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா வரவேற்புரையாற்றினர்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அண்ணா திமுக என்ற மாபெறும் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கின்றனர். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். தைக்கு பிறகு அண்ணா திமுகவிற்கு மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை எழுச்சியை ஆண்டவன் கொடுத்துள்ளான். அதை பக்குவமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நம்மை நெருங்கி வருகிறது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விருதுநகரில் அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது 355 கோடியில் ரூபாய் விருதுநகரில் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்துக்கு நான்தான் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தேன். தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக இன்றைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். அதற்கு காரணம் அதிமுகவின் சிறப்பான ஆட்சிதான். இப்படி எத்தனை திட்டங்கள் நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சிக்கு 446 கோடி ரூபாயில் தனியாக ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். விருதுநகரில் பாதாளசாக்கடை திட்டம் அண்ணா திமுக ஆட்சியில் தான் சிறப்பாக முடிக்கப்பட்டது. விருதுநகர் நகர் முழுவதும் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் புதிதாக அமைத்து கொடுத்துள்ளோம். விருதுநகரில் 2011 க்கு முன்பு இருந்த சாலைகளையும் பாருங்கள் 2011க்கு பின்பு உள்ள 2021வரை உள்ள சாலைகளையும் பாருங்கள். அந்த அளவிற்கு எல்லா சாலைகளையும் புதிதாக அமைத்து கொடுத்துள்ளோம்.

விருதுநகர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரியுங்கள். அதிமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரியுங்கள். உங்களுக்கான தனி மரியாதையை வாக்காளர்களிடம் உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு காலங்களில் மேளதாளத்துடன் கூட்டத்துடன் சென்றால்தான் பெரிய வேட்பாளர் இவர்தான் ஜெயிப்பார்கள் என்று பேசுவார்கள். இன்றைய சூழ்நிலையில் ஆடம்பரத்தையோ அதிகாரத்தையோ மக்கள் விரும்பவில்லை. அன்பான பேச்சையும் ஆரவாரமில்லாத வாக்கு சேகரிப்பையும் தான் மக்கள் விரும்புகின்றனர். கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து மாஸ்க் அணிந்து வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரியுங்கள். விருதுநகர் நகராட்சி தேர்தலை பொறுத்தமட்டில் அண்ணா திமுக முன்னேற்ற கழகம் தான் கைப்பற்றும். திமுக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகின்றது. யார் சேர்மன், யார் துணை சேர்மன் என்று குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுகவிலிருந்து திமுகவிற்கு ஓடிப் போனவர்கள் எல்லாம் அங்கு சீட்டு கிடையாது என்று கூறிவிட்டனர். சிலர் தவளை போன்று அடிக்கடி கட்சி மாறிக்கொண்டே இருக்கின்றன. நமது வேட்பாளர்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். ஆளும் கட்சி என்றெல்லாம் நீங்கள் பயப்படவேண்டாம். எத்தனை சீட்டு வரப்போகின்றதோ என்று திமுகவினர் பயந்துதான் இருக்கின்றனர். கூட்டணி பிரச்சனையால் திமுக தனிமரமாக நிற்கின்றது. அதிமுக ஆலமரமாக இருக்கின்றது. ஆட்சி மாறலாம், காட்சிகள் மாறலாம் ஆனால் அதிமுக ஆட்சி செய்த சாதனைகளை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது நமது மிகப்பெரிய பணியாகும்.

விருதுநகர் நகராட்சியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 36 வார்டுகளிலும் அண்ணா திமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். அதிமுகவின் சாதனைகளை மட்டும் கூறி தினமும் இரட்டை இலை சின்னத்தை வார்டுகளில் காண்பித்துக் கொண்டே வாக்கு சேகரிக்க வேண்டும். நகராட்சி சேர்மன் பதவி, வைஸ் சேர்மன் பதவி அத்தனையும் அண்ணா திமுக கைப்பற்றும். பெருந்தலைவர் காமராஜர் பணியாற்றிய விருதுநகர் நகராட்சியில் நல்லவர் ஒருவர்தான் நகராட்சி தலைவராக வரவேண்டும். மக்களுக்கு தொண்டு செய்யக் கூடிய ஒருவர்தான் நகராட்சித் தலைவராக வரவேண்டும். அது அதிமுக வேட்பாளர் ஒருவர் தான் முடியும். ஒட்டுமொத்தமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நகர பேரவை செயலாளர் நாகசுப்பிரமணியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணியின் விருதுநகர் நகர செயலாளர் பாசறை சரவணன், மகளிர் நிர்வாகி சாந்தி, விருதுநகர் நகராட்சி அதிமுக சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.