• Tue. Apr 30th, 2024

உறவுகளை மீறி வேறு இங்கு எதுவும் இல்லை அதுதான் – விருமன்

நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தான் தயாரித்த ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து கிராமத்து பின்னணியில் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘விருமன்’.இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், ‘மைனா’ நந்தினி, வசுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த ‘விருமன்’ படம் பற்றி இயக்குநர் முத்தையா கூறியதாவது “விருமன்’ என்பது குல சாமியின் பெயர். ‘விருமன்’னா தேனி பக்கம் ‘பிரம்மன்’ என்று சொல்வாங்க. அதுதான் இந்தப் படத்தின் கதைக் களம். என் எதிர்த்த வீட்டில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக் காட்டணும்.

அது நமக்கு நல்லது செய்யும். நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் அந்த உறவுதான் நல்ல உறவு.இதில் எல்லாமே உறவுகள்தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க.. இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் ‘விருமன்’. அந்த நேர்மையை பேச வருபவன்தான் இந்த ‘விருமன்’. தட்டிக் கேட்கிறவனாக ‘விருமன்’ இருப்பான். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா முன்னாடி நிற்கிறவன் ‘விருமன்’தான்.

உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். ‘விருமன்’ உங்களோட இணைஞ்சு நிற்பான். ‘விருமனைப்’ பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு அவரவர் மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக் கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.

படத்தில் கார்த்திதான் அந்த ‘விருமன்’. சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு அதிதி, ‘தேன்மொழி’ என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும்.‘பந்தல் பாலு’ன்னு கருணாஸ், ‘குத்துக் கல்லு’ன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ர, மனோஜ், ஆர்.கே.சுரேஷ், ’மைனா’ நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய.அம்மாவாக சரண்யா. அவங்களை சுற்றித்தான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட படத்தில் நடித்த அனைவரும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, ஃபேமிலி, ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்…” என்றார் இயக்குநர் முத்தையா.


இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக் குழு உற்சாகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *