கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போதைக்காகப் பயன்படுத்தப்படும் டாபென்டடால் (Tapentadol) வலி நிவாரணி மாத்திரைகளைச் சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்து இருந்த 26 வயது இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து 58 மாத்திரைகளைப் பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையின் போது, சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் பிடிபட்டார்:
விசாரணையில், அவர் பேரூர் செட்டிபாளையம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து போதைக்காகப் பயன்படுத்தப்படும் 58 டாபென்டடால் (Tapentadol) மாத்திரைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சக்திவேல் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சட்ட விரோதமாகப் போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



