மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 33 பேருக்கு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான ‘களப் பயிற்றுநர்’ (Field Trainer) பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பணியிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, இன்று (26.11.2026) மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கச் சென்றோம். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால், மாவட்ட வருவாய் அலுவலரை (DRO) நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.
ஆனால், மதுரை மாவட்டத்தில் மட்டும் 33 தலைமை ஆசிரியர்களுக்கு இப்பணி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் பல்வேறு நிர்வாகப் பணிச்சுமைகளுக்கு இடையே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்த வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் உள்ளோம். இந்நிலையில், தொடர்ச்சியாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியையும் மேற்கொள்வதால் மாணவர்களின் கல்வி நலன் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணியிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலரிடம் வலியுறுத்தினோம்.
ஆனால், ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அப்பணியைக் கட்டாயம் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடிய அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அவசர ஆலோசனை நடத்தினர். அதில், மாணவர்களின் நலன் கருதியும், தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்படும் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், மதுரை மாவட்டத்தில் 33 தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Field Trainer) பணியை அனைவரும் அறவே புறக்கணிப்பது என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கற்பித்தல் அல்லாத கூடுதல் பணிச்சுமைகளை ஏற்கத் தயாராக இல்லை என்பதை மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தமாகத் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எங்களது கோரிக்கையை ஏற்று இப்பணியிலிருந்து எங்களை விடுவிக்க மறுக்கும் பட்சத்தில், அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை (30.11.2026) அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் (CEO Office) முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. எனவே, மாணவர்களின் பொதுத்தேர்வு நலனைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்ட நிர்வாகமும், மாவட்டக் கல்வித்துறையும் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு, தலைமை ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து விடுவித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


