தேனி மாவட்டம், வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 12 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மஞ்சனூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் மலைப்பகுதியில் விளைந்திருந்த காட்டு ஆமணக்கு விதைகளை மாணவர்கள் சிலர் விளையாட்டாகச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலை பள்ளிக்கு வந்த மேலும் 10 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிச் சீருடையிலேயே இருந்த அந்தக் குழந்தைகளும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைக் கிராமப் பள்ளி மாணவர்கள் 12 பேர் விஷத்தன்மை கொண்ட விதைகளைச் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



