• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் ஸ்தானிகப் பட்டர் வீட்டில் அதிகாரிகள் ரகசிய ஆலோசனை எனப் புகார்..,

ByKalamegam Viswanathan

Nov 26, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தானிகப் பட்டர் வீட்டில், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆலோசனை நடத்தியதைக் கண்டித்து கிராம பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தின் பின்னணி:
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள நெல் மண்டி மண்டபத்தில், இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, சன்னதி தெருவிலேயே வசிக்கும் கோயிலின் முதல் ஸ்தானிகப் பட்டர் சுவாமிநாதன் இல்லத்தில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி, திருக்கோயில் கண்காணிப்பாளர் சுமதி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் உறுப்பினர் ராஜபாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதாகத் தகவல் பரவியது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆதரவாக ஸ்தானிகப் பட்டர்களிடம் கடிதம் எழுதி வாங்கவே அதிகாரிகள் வந்துள்ளதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, கிராம பொதுமக்கள் சுவாமிநாதன் பட்டர் வீட்டின் முன்பு திரண்டு திடீர் ஆலோசனைக் கூட்டம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அறைக்குள் பூட்டிக் கொண்ட அதிகாரிகள் & 5 பேர் கைது:
பொதுமக்கள் திரண்டதைக் கண்டதும், ஆலோசனையில் ஈடுபட்டிருந்த துணை ஆணையர் செல்வி, கண்காணிப்பாளர் சுமதி மற்றும் அறங்காவலர் குழுவினர் சுவாமிநாதன் பட்டர் வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர். தொடர்ந்து, கிராமக் கமிட்டி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் வீட்டின் வாயிலில் குழுமியதால் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், உதவி ஆணையர் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர், அங்கு குழுமியிருந்த கிராமக் கமிட்டியைச் சேர்ந்த வெற்றிவேல், ராமலிங்கம் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனர்.

ஸ்தானிகப் பட்டர்கள் 4 பேர் கூட்டறிக்கை:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தானிகப் பட்டர்கள் சார்பில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த 2025-ஆம் ஆண்டே இது தொடர்பாக நாங்கள் எங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் கோயிலின் முதல் ஸ்தானிகப் பட்டர் சுவாமிநாத பட்டர், 2-வது ஸ்தானிகப் பட்டர் பாலசுப்ரமணியன், 3-வது ஸ்தானிகப் பட்டர் சொக்கு சுப்பிரமணியம் மற்றும் 4-வது ஸ்தானிகப் பட்டர் சண்முகசுந்தரம் ஆகிய நால்வரும் கூட்டாகக் கையெழுத்திட்டுள்ளனர்.