• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

நிர்வாகத் திறமையற்ற அரசால் ஆட்சி தானாகக் கவிழும்’: கோவையில் இபிஎஸ் தாக்கு..,

BySeenu

Nov 21, 2026

‘தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறமையற்ற இந்த அரசாங்கம் யாரும் கவிழ்க்காமலேயே தானாகக் கவிழ்ந்து விடும்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

​கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், காவிரி நீர் விவகாரம் மற்றும் மின் கொள்முதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

​செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:​மற்ற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலை மாறி, தற்போது தமிழகத்திலேயே மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவோம் என டிஜிபி அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் தவறிவிட்டன. போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

​கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டும், தமிழக அரசு வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பும் நிலை உள்ளது.

ராணிப்பேட்டையில் அமைச்சர் ஒருவர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்குச் சென்று பெண் காவலர்களின் செல்போன்களைப் பறித்து ஆய்வு செய்ததும், ஈரோட்டில் மற்றொரு அமைச்சர் நள்ளிரவில் கோப்புகளை எடுத்து வருமாறு பெண் எஸ்.பி-யை அழைத்ததும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம். லாட்டரி, ஜாக்பாட் அடித்தது போல் ஆட்சிக்கு வந்துவிட்ட இவர்களுக்கு நிர்வாகம் நடத்தத் தெரியவில்லை; முதலமைச்சர் எதற்கும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்.
​

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவோ, ஆறுதல் கூறவோ இல்லாமல், துக்கத்தில் இருந்தவர்களைச் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறிய ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, மேகதாது விவகாரத்தில் மௌனம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகள் என மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எங்களிடம் 41 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்; நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை, நிர்வாகச் சீர்கேட்டால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.
​காவிரி நீரைப் பொறுத்தவரை, ஏற்கனவே குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. சம்பா சாகுபடி முழுமையாக விளைய ஜனவரி மூன்றாவது வாரம் வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது மேட்டூர் அணையில் 61 அடி (25 டிஎம்சி) தண்ணீர் மட்டுமே உள்ளதால் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுக்கிறது. டெல்லியில் சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்ற முதலமைச்சர், கர்நாடக முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துத் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

​மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மூன்றே ஆண்டுகளில் மின்வெட்டில்லா மாநிலமாக மாற்றி, 2021 வரை உபரி மின்சார மாநிலமாகத் தமிழகத்தை வைத்திருந்தோம்.

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கினோம். கடந்த ஆட்சியில் யூனிட் ஒன்றுக்கு 11 முதல் 20 ரூபாய் வரை மின் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாகக் கூறி ரத்து செய்த தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், பின்னர் யூனிட் 37.50 ரூபாய்க்கும், 41.50 ரூபாய்க்கும் மின்சாரம் வாங்க டெண்டர் விட்டார். 20 ரூபாயிலேயே ஊழல் என்றால், 37.50 ரூபாயில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கும்?
​அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் உள்ள இரண்டு கோடித் தொண்டர்களில் வேலுமணியும் ஒருவர்; அவருடைய தனிப்பட்ட கருத்தையெல்லாம் ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தனிக்கட்சி தொடங்கி பல தேர்தல்களைச் சந்தித்துவிட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைப்பது குறித்து ஊடகங்கள் திட்டமிட்டுக் கேள்வி எழுப்புவதாகவும், திமுகவில் இருந்து பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கிய வைகோவை மீண்டும் இணைப்பீர்களா என யாரும் கேட்பதில்லையே என்றும் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.