• Wed. Nov 18th, 2026

உத்தமபாளையம் அருகே ரைஸ் மில்லில் 41 மூட்டை அரிசி மாவு -அதிகாரிகள் விசாரணை..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அணைப்பட்டி ஊராட்சியில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கம்பம் தொகுதியில் உள்ள அனைத்து ரைஸ் மில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, உத்தமபாளையம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ரைஸ் மில்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 41 மூட்டைகளில் அரிசி மாவு இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ரைஸ் மில் பொறுப்பாளர் அஜ்மல் கானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, அவற்றை அரிசியாக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் வழங்கியதாகவும், அதற்கான தொகை அரசிடமிருந்து கிடைக்காததால் மீதமிருந்த அரிசியை மாவாக அரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நெல் கொள்முதல் மற்றும் அரவை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், அங்கிருந்த அரிசி மாவு ரேஷன் அரிசியில் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், ரைஸ் மில்லுக்கு பூட்டுப் போட்டு, அதன் சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.