• Wed. Nov 18th, 2026

தேக்கம்பட்டி சிறையில் முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழு நேரில் விசாரணை!

ByAjmalkhan saleemraja

Nov 18, 2026

தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு, பாதுகாப்புப் பணியில் இருந்த 4 காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 43 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைக் கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட 9 சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் தமிழக அரசு உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி சங்கர், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கைதிகள் தப்பிச் சென்றபோது பணியில் இருந்துவிட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றனர்? பாதுகாப்புப் பணியில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன? என்பது குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை முடிவடைந்த பின்னர், உயர்மட்டக் குழுத் தலைவர் முன்னாள் டிஜிபி திரிபாதி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.