• Mon. Nov 16th, 2026

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்- ஆட்சியரிடம் கோரிக்கை மனு..,

ByAjmalkhan saleemraja

Nov 16, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில், வருகின்ற கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேனி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட இந்து முன்னணி வடக்கு மாவட்டத் தலைவர் பி. முருகன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில்,

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவை அப்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பளித்து, முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருநாளன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என இந்து முன்னணி மற்றும் முருக பக்தர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.