கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல், அறிவியல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தும் 16வது ”STEAM X -2026′ கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

இதனை ஸ்டேன்ஸ் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ் தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்கள் அறிவை வெளிப்படுத்தி, சிக்கல்களைத் தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராயவும் இத்தகைய கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளியின் தாளாளர் மெர்சி உம்மன், கௌரவப் பொருளாளர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புத்திறனைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர். முன்னதாக பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அவரும் தலைமை ஆசிரியர் மற்றும் துணை முதல்வர் டாக்டர் வி.திவாகரன், ஜூனியர் பள்ளி துணை முதல்வர் பிரியா ஷீன், உதவித் தலைமை ஆசிரியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரும் இணைந்து, சிறப்பு விருந்தினரையும் நடுவர்களையும் கௌரவித்தனர்.
