முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 10-ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து காப்புக் கட்டி, கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று, சண்முகர் சன்னதியில் முருகப்பெருமானுக்கு துளசி, மரிக்கொழுந்து மற்றும் கதம்ப மலர்களால் பச்சை நிறத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சண்முக அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான விரதமிருக்கும் பக்தர்கள் பங்கேற்று, அர்ச்சனை மற்றும் தீபாராதனையை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதனிடையே, திருவிழாவை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நவீன சோதனைக் கருவிகளுடன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, கோவில் நுழைவுவாயில், தேர் நிறுத்தப்படும் பகுதி, லட்சுமி தீர்த்தக்குளம், பழனி ஆண்டவர் கோவில் வாசல், சன்னதி தெரு மற்றும் நான்கு ரத வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.

கந்த சஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.