• Fri. Nov 13th, 2026

தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கஞ்சா வியாபாரி…

ByKalamegam Viswanathan

Nov 13, 2026

கஞ்சா விற்பனை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடிய நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் அவரை சிறுமலை பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தேன்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25). இவர் மீது கடந்த 2024-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்டம் முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிமன்றத்தில் தண்டனை அறிவிப்பு & தப்பியோட்டம்:
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி சுதாகர் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ராஜாவை குற்றவாளி என அறிவித்ததோடு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்களைக் கேட்டறிந்த ராஜா, நீதிமன்ற அறையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அங்கிருந்து நைசாக நழுவித் தப்பியோடினார். சிறிது நேரத்திற்குப் பிறகே அவர் தப்பியது தெரியவந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை மாநகர போலீசார் மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிறுமலையில் மடக்கிப் பிடித்த தனிப்படை:
இதனிடையே, தப்பியோடிய குற்றவாளி தனது சொந்த ஊரான சிறுமலைப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

சிறுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில், அங்குள்ள ஒரு பகுதியில் பதுங்கியிருந்த ராஜாவை போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ராஜாவை திண்டுக்கல் தனிப்படை போலீசார் மதுரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் காவல்துறையினர் விரைந்து பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.