• Thu. Nov 12th, 2026

சின்னமனூர் பகுதியில் கந்துவட்டி கொடுமை அதிகரிப்பு ..,

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சூழ்நிலை காரணமாக கடன் வாங்கியவர்களிடம், கந்துவட்டி விடும் நபர்கள் தரக்குறைவாக பேசுவதும், வீட்டு வாசலில் வந்து நின்று மிரட்டுவதும், சண்டையிடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

பிள்ளைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு, வியாபாரம், குடும்ப செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு வழியின்றி பலர் கந்துவட்டிக்கு கடன் வாங்குவதாக கூறப்படுகிறது. கடன் கொடுக்கும் போது அன்பாக பேசும் கந்துவட்டிக்காரர்கள், வட்டி கட்ட சிறிது தாமதமானால் கூட வீட்டிற்கு வந்து அவமானப்படுத்தும் வகையில் பேசுவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ரூ.10,000 கடனுக்கு கையில் கிடைப்பது ரூ.7500மட்டுமே!

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.10,000 கடன் கேட்டால், முதலிலேயே வட்டியாக ரூ.2500-ஐ பிடித்தம் செய்து கொண்டு, மிச்சம் ரூ.8,200-ஐ மட்டுமே கையில் கொடுப்பதாக கூறுகின்றனர்.

அதாவது கடன் வாங்கும் போதே, வாங்காத பணத்திற்கும் வட்டி கட்ட வேண்டிய கொடுமை நிலை உள்ளது. வாங்கிய தொகையை விட, வட்டியாகவே இரண்டு, மூன்று மடங்கு கட்டிய பிறகும் அசல் தொகை அப்படியே இருப்பதாகவும், வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் கடன் சுமையால் சீரழிந்து, ஊரை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கட்டவில்லை என்றாலும் வீட்டு வாசலில் சண்டை!

ஒரு நாள் வட்டி கட்ட முடியாமல், “நாளை கொடுக்கிறோம்” என்று கூறினால் கூட, கந்துவட்டிக்காரர்கள் அதை கேட்பதில்லை என கூறப்படுகிறது.

அன்றே வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் தரக்குறைவாக பேசுவது, சண்டையிடுவது, குடும்பத்தை அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

கடன் வாங்கியவர் திருடன் அல்ல, சூழ்நிலை காரணமாக கடன் வாங்கியவர் என்பதை புரிந்து கொள்ளாமல், மனிதாபிமானமின்றி நடந்து கொள்வதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கந்துவட்டி சட்டப்படி குற்றம் என்பதால், மிரட்டலுக்கு பயந்து மௌனமாக இருக்க வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சின்னமனூர் பகுதியில் கந்துவட்டி வசூல் என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டுபவர்கள் மீது காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.