கடந்த 8-ம் தேதி இரவு 7.30 மணியளவில், திருச்சியில் இருந்து 46 கிலோ வெள்ளிப் பொருட்களை கொண்டு வந்த முகமது ஹுசைன் என்பவரை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் தலையில் வெட்டி வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீவிர விசாரணையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதுங்கியிருந்த சமீர், ரிஸ்வான், இஸ்மாயில், சாதிக் பாஷா, மன்ஷா, லாரன்ஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 46 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 கார்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜமாலுதீன், சாகுல் ஹமீது உட்பட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இணை ஆணையாளர் ஜெயந்தி மற்றும் துணை ஆணையாளர் கார்த்திகேயன், “48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட 46 கிலோ வெள்ளிப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.