கோவை நகரின் அதிவேகப் போக்குவரத்து நிறைந்து காணப்படும் திருச்சி சாலையில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டபடியே இருசக்கர வாகனத்தில் நடனமாடிச் சென்ற இளம்பெண்ணின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் முக்கியச் சாலையான சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை (ESI Hospital) பகுதியில் இருந்து ஹோப் காலேஜ் (Hope College) மேம்பாலப் பகுதி வரை இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரை இயக்கிச் சென்று உள்ளார். அப்போது, தனது இரு காதுகளிலும் ஹெட்போன்களை (Headphones) மாட்டிக் கொண்டு, அதில் ஓடும் பாடலுக்கு ஏற்பக் கைகளைத் தூக்கியும், தலையை ஆட்டியும் பைக் ஓட்டிக்கொண்டே ‘டான்ஸ் வைப்’ (Dance Vibe) செய்தபடி சென்று உள்ளார்.
சிங்காநல்லூர் – ஹோப் காலேஜ் சாலைப் பகுதி எப்போதும் அரசுப் பேருந்துகள், கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கார்கள் அதிவேகத்தில் சென்று வரும் முக்கியமான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியாகும்.

இத்தகைய சூழலில், காதில் ஹெட்போன் அணிந்து இருப்பதால் பின்னால் இருந்து வரும் வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்காத அபாயம், வண்டியை ஓட்டும் போது இரு கைகளையும் விட்டு நடனமாடுவதால் எப்போது வேண்டுமானாலும் நிலைதடுமாறி விழும் ஆபத்து எனத் தனது உயிரையும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த இளம்பெண் செய்த இந்தச் சாகசம் சக பயணிகளைப் பதற வைத்தது.
அவருக்குப் பின்னால் காரில் பயணித்த சிலர், இந்த ஆபத்தான பயணத்தைச் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “ரீல்ஸ் மற்றும் சமூக வலைதள விளம்பரத்திற்காக இதுபோன்று உயிரைப் பணயம் வைத்துச் சாலையில் சாகசம் செய்வது கண்டிக்கத்தக்கது. பின்னாடி வரும் பெரிய வாகனம் மோதினால் யார் பொறுப்பு ?” என்று கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கோவையில் 10 வயது சிறுவன் கார் ஓட்டியது, அதிவேக பைக் சாகசங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த இளம்பெண்ணின் வாகனப் பதிவெண்ணை (Vehicle Number Plate) வைத்து கோவை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.