• Fri. Nov 6th, 2026

சோழவந்தான் இரயில்வே மேம்பாலத்தில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்கள்..,

ByKalamegam Viswanathan

Nov 6, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லக்கூடிய முக்கிய பிரதான இணைப்பு சாலையாக இந்த இரயில்வே மேம்பாலம் செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்து செல்ல இந்த பாலத்தையே முதன்மையாக பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குவாரி மற்றும் கிரஷர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்றில் இருந்து, பாலத்தின் நெடுகிலும் அதிகளவில் பெரிய ஜல்லிக் கற்கள் கொட்டிச் சென்றுள்ளன.

வாகனத்தின் பின்புறத்தை முறையாக மூடாமலும், தார்பாய் கொண்டு பாதுகாப்பு வசதி செய்யாமலும் விதிமுறைகளை மீறி அதிவேகமாக இயக்கப்பட்டு வந்ததே கற்கள் சாலையில் சிந்தியதற்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

சாலை முழுவதும் பரவிக் கிடைக்கும் இந்த ஜல்லிக் கற்களால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிவேகமாக வரும் பேருந்து மற்றும் கார்களின் டயர்கள் மீது கற்கள் மோதி டயர் வெடிப்பு ஏற்படும் அபாயமும், பாதசாரிகள் மீது கற்கள் சிதறி காயங்கள் ஏற்படும் சூழலும் நிலவுகிறது.

இதனால் போக்குவரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, அசம்பாவிதங்கள் அல்லது உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாலத்தில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்களை அகற்ற வேண்டும் எனச் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டுவிடும் என்று கருத்தில் கொண்டு ஜல்லி கற்களை பொதுமக்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்

மேலும், தார்பாய் மூடாமல் ஆபத்தான முறையில் ஜல்லி ஏற்றி வரும் லாரிகள் மீது காவல்துறை கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது