மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (தவெக) முஸ்தபாவிடம், சட்டமன்றத்தில் அரசுக்கு எதிரான தீர்மானத்தின் போது எதிர்த்து வாக்களிக்க ரூ.30 கோடி வரை பணம் தருவதாக அதிமுக தரப்பில் பேரம் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பி.எம். மன்னனை நேரில் வரவழைத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கைதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது பொய் வழக்கு என்றும் விமர்சித்துள்ளார். முன்னாள் துணை மேயர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் தமிழக அரசியலிலும், மதுரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
